தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லிக்கு மாம்பழங்கள் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ’கிசான் ரயில்’ - டெல்லியில் கர்நாடக மாம்பழங்கள்

விவசாயிகளுக்கான போக்குவரத்துச் செலவில் 50 விழுக்காடு மானியம் வழங்கும் சிறப்பு ரயிலான ‘கிசான் ரயில்’, கோலார் பிராந்தியத்தில் பயிரிடப்பட்ட 250 டன் மாம்பழங்களை ஏற்றிக் கொண்டு, டோடனாட்டா ஹால்ட் ஸ்டேஷனில் (சிந்தமணி) இருந்து நேற்று (ஜூன்.19) டெல்லி புறப்பட்டது.

மாம்பழங்கள்
மாம்பழங்கள்

By

Published : Jun 20, 2021, 10:48 AM IST

கோலார் (கர்நாடகா): கோலார் பிராந்தியத்தில் பயிரிடப்பட்ட 250 டன் மாம்பழங்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயிலான 'கிசான் ரயில்', கோலார் மாவட்டத்தின் டோடனாட்டா ஹால்ட் ஸ்டேஷனில் (சிந்தமணி) இருந்து நேற்று (ஜூன். 19) டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து பெங்களூரு பிரிவு ரயில்வே மேலாளர், அசோக் குமார் வர்மா பேசுகையில், “கிசான் ரயில் வழியாக பண்ணை விளைபொருள்களை ரயிலில் கொண்டு செல்வது, சாலை வழியாக கொண்டு செல்வதைவிட மலிவானது, வேகமானது.

செலவு, நேரம் குறைவு

சாலைப் போக்குவரத்தில் ஒரு கிலோவுக்கு ஏழு முதல் எட்டு ரூபாய் வரை செலவாகும். ஆனால், கிசான் ரயிலின் ஒரு கிலோ போக்குவரத்து செலவு மானியத்துடன் வெறும் 2.82 ரூபாய் மட்டுமே ஆகும். இதன் மூலமாக விவசாயிகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம். விவசாயிகளின் உற்பத்திப் பொருள்கள் சாலை வழியாக டெல்லியை அடைய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். ஆனால், கிசான் ரயில் வெறும் 40 மணி நேரத்தில் டெல்லியை எட்டும்” என்றார்.

தென்மேற்கு ரயில்வே (எஸ்.டபிள்யூ.ஆர்) ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு, குறைந்தது ஒரு கிசான் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, பண்ணை உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (எஃப்.பி.ஓ), கிசான் ரயில் சேவைகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என கோலார் மக்களவை எம்.பி. எஸ்.முனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து எஸ்.டபிள்யு.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கிசான் ரயில்கள் நேர அட்டவணைப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.

தாமதம் தவிர்ப்பு

இதனால் பாதையில் தாமதத்தை தவிர்ப்பதற்கான நடைமுறைகள் மிகவும் கண்டிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. இது நாடு முழுவதும் பழங்கள், காய்கறிகள், பிற விவசாய விளைபொருள்கள் போன்ற அழிந்துபோகக்கூடிய பொருள்களின் விரைவான இயக்கத்திற்கு உதவுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

மானியம்

கிசான் ரயில் மூலம் பழங்கள், காய்கறிகளை கொண்டு செல்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில், உணவு பதப்படுத்துதல் மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தால் 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் தயாரிப்புகளுக்கு நல்ல விலையையும் பெற முடியும்.

இதையும் படிங்க : கடலுக்கு அடியில் மர்ம தீவு... ஆச்சரியத்தில் நிபுணர்கள்!

ABOUT THE AUTHOR

...view details