பவுரி (உத்தரகாண்ட்): ’’இந்து அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, இஸ்லாமிய நபருடனான தனது மகளின் திருமணத்தை, ரத்து செய்து உள்ளதாக”, உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும், பவுரி நகராட்சித் தலைவருமான யஷ்பால் பினாம் தெரிவித்து உள்ளார். மகளின் சந்தோஷத்திற்காக, இந்த திருமணத்திற்குத் தான் சம்மதம் தெரிவித்து இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.
மே 28ஆம் தேதி திருமணம் நடக்க இருந்ததை ஒட்டி, ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வந்தன. திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதற்கு எதிர்மறையாகவே அதிகளவில் கருத்துகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில், இந்த திருமண நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து அமைப்புகள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வந்தன. தனது உருவப் பொம்மையை எரிக்கும் அளவிற்கு, விஷயம் கைமீறிச் சென்ற நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த யஷ்பால் பினாம் கூறியதாவது, ’’நான் பொதுமக்களின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிப்பவன். மகளின் சந்தோஷத்திற்காக, இந்த திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தேன். தற்போது அதை திரும்பப் பெற்று, இந்த திருமணத்தை, ரத்து செய்து உள்ளேன்” என அவர் தெரிவித்து உள்ளார்.