கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கே.ராமச்சந்திரன் (84). கோழிக்கோட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ராமச்சந்திரனுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார்.
தனது ஆதரவாளர்களால் மாஸ்டர் என அன்பொழுக அழைக்கப்படும் கே.கே.ராமச்சந்திரன், ஆறு முறை கேரள சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். வயநாடு, சுல்தான் பத்தேரி, கல்பேட்டா ஆகிய 3 தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக அரசியலில் காலடி எடுத்து வைத்த அவர், தனது கடும் உழைப்பால் கேரள காங்கிரஸ் பொதுச் செயலாளராக உயர்ந்தார். காங்கிரஸ் தேசியக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளையும் அவர் வகித்தார்.
முன்னாள் அமைச்சர் கே.கே.ராமச்சந்திரன் காலமானார்! கடந்த 1995ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் குடிமை பொருள் விநியோக அமைச்சராகவும், 2004ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2011ஆம் ஆண்டில் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட கே.கே.ராமச்சந்திரன், பின்னர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார். மறைந்த கே.கே.ராமச்சந்திரனுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா போன்ற பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க :பிரிட்டன் விமானங்களின் தடையை நீட்டிக்க வேண்டும் - கெஜ்ரிவால்