பெங்களூரு:பெங்களூருவில் உள்ள ஆங்கில செய்தி நிறுவனத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரான ஸ்ருதி நாராயணன் சீனியர் சப் எடிட்டராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாள்களாக அலுவலகத்திற்குச் செல்லாமல் இருந்த அவர், வேலவைட் ஃபீல்டில் உள்ள தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் பத்திரிகையாளர் : கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் கேரளா தலிப்பறம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான முதல் நாளிலிருந்தே அனீஸ் ஸ்ருதியிடம் சந்தேகத்துடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. படுக்கையறைக்குள் கேமரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலமுறை ஸ்ருதியின் தாயார் செல்போனில் அழைத்தபோதும் ஸ்ருதி செல்போனை எடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டில் தற்கொலையால் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஸ்ருதி தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.