டெல்லி :எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா கடந்த ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது குளிர்கால கூட்டத் தொடரில் இந்த இரண்டு மசோதாக்களும் நேற்று (டிச. 5) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு மசோதாக்களையும் இன்று (டிச. 6) மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 370 வாக்குகளும், எதிராக 70 வாக்குகளும் பதிவான நிலையில், இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்து இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தற்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து இருக்கும் என்றும் இது வரலாற்று தவறு என்றும் குறிப்பிட்டார்.