டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சீன விசா பண மோசடி வழக்கில், விசாரணைக்காக இன்று (ஜனவரி 1) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய ஏஜென்ஸி இந்த வழக்கில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் வாக்குமூலத்தை கடந்த டிசம்பர் மாதம் பதிவு செய்தது.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம், இது தேர்தல் நெருங்கும் வேளையில் இவ்வாறு நடப்பது இயல்பான விஷயமாகும். இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறினார். 2011ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் உள்துறை அமைச்சகத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கார்த்திக் சிதம்பரம் கணக்காளர் பாஸ்கர ராமன் மற்றும் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த சிபிஐ வழக்கின் அடிப்படையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை, கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக அமலாக்கத்துறை விசாரணை குறித்து கார்த்தி சிதம்பரம், "இது வலை போட்டு மீன் பிடிப்பது போன்ற விசாரணையாகும். நான் எனது தரப்பில் விசாரணையில் கேட்ட குறிப்புகளை அளித்துவிட்டேன். இந்த வழக்கு வேண்டுமென்றே பதியப்பட்டது. நாங்கள் விசா செயல்முறையின் போது ஒரு சீனர்களை கூட சட்ட விரோதமாக அனுமதிக்கவில்லை”. என்றார். கார்த்திக் சிதம்பரம் மீது சீன விசா பண மோசடி, ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்ஸிஸ் என மூன்று பண மோசடி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - வங்கதேச எல்லையில் அதிகரிக்கும் போலி அடையாள அட்டை தயாரிப்பு..! என்ஐஏ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!