தட்சிணக் கன்னடா (கர்நாடகா):தட்சிணக் கன்னடா மாவட்டத்தின் மங்களூரு நகரில் உள்ள கல்லூரிக்கு சில மாணவிகள் இன்று(மே 30) ஹிஜாப் அணிந்து வந்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். மங்களூருவில் உள்ள கல்லூரிக்கு இன்று 12 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் அவர்களை வகுப்புக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, ஹிஜாப்யை அகற்றுமாறு கூறி உள்ளனர். அவர்கள் ஹிஜாப்யை அகற்ற மறுத்த நிலையில், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து, மாணவிகள் தட்சிண கன்னடா மாவட்ட ஆணையர் ராஜேந்திரன் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் உடுப்பியில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போராட்டம் நடத்தப்பட்டது. உடுப்பியில் ஆறு மாணவிகள் தொடங்கிய போராட்டம், பின்பு மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது.