கர்நாடகா(பெங்களூரு): சித்தராமையாவின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், கர்நாடகா உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் வெற்றிப் பெற்று ஆட்சி செய்துவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா போட்டியிட்ட வருணா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது குறித்து விளக்கமளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 28) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, டிகிரி முடித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது முக்கிய வாக்குறுதிகளாக அளித்திருந்தது. இவ்வாறாக அக்கட்சி வாக்காளர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களை அளித்து சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அக்கட்சி வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''உத்தரவாத திட்டங்கள் மூலம் வாக்காளர்களை காங்கிரஸ் கவர்ந்து இழுத்துள்ளதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவம் பிரிவு 123 (1) மற்றும் பிரிவு 123 (2) ஆகியவற்றின் கீழ் லஞ்சம் மற்றும் வாக்காளர்களை பாதிக்கும் முயற்சியாகும் என்றும்; சட்டப்பிரிவு 123 (4) வசீகரிக்கும் விளம்பரங்கள் செய்வது குற்றமாகும் எனவும் கூறுகிறது. எனவே, வருணா சட்டமன்றத் தொகுதியில் இருந்து சித்தராமையா எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது" என்று குறிப்பிடப்பட்டது.