கர்நாடகா:கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், கரோனா பரவலின்போது நடந்த பிரச்சினைகள், உதய்ப்பூர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவைகள் தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. குறிப்பாக, 1,474 ட்விட்டர் கணக்குகளில், 175 ட்வீட்களில் உள்ள 39 யுஆர்எல்களை (URL) நீக்கும்படி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவை ட்விட்டர் நிறுவனம் ஏற்கவில்லை. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவர்களது தனிப்பட்ட கருத்தை தெரிவித்து உள்ளதாகவும், அவற்றை நீக்க முடியாது என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், பதிவுகளை நீக்குவது சட்டப்படி கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், அந்த பதிவுகள் ட்விட்டரின் விதிமுறைகளை மீறவில்லை என்றும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ட்விட்டர் பதிவுகளை நீக்கும்படி, மத்திய அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாகவும், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.