பெங்களூரு (கர்நாடகா):கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பொறுப்பேற்றனர். காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்தது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் - டிப்ளமா படித்தவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை ஆகிய ஐந்து வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.
அதன்படி, ஐந்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்தை வழங்கும் 'சக்தி திட்டம்' கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அதேபோல், மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக அரசு வழங்கிய ஐந்து வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் கிரஹலட்சுமி திட்டம் (Gruha Lakshmi scheme) இன்று (ஆகஸ்ட் 30) தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழா மைசூரில் நடைபெற்றது.