தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட எதிர்ப்பு - கர்நாடக விவசாயிகள் போராட்டம்!

Karnataka farmers protest: கர்நாடகாவின் மாண்டியாவில், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாய அமைப்புகள் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 5:36 PM IST

மாண்டியா (கர்நாடகா): கர்நாடக மாநிலம் மாண்டியா தாலுகாவின் இந்துவாலா என்ற பகுதிக்கு அருகில், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று (ஆகஸ்ட் 22) காலை 11.30 மணியளவில் இந்துவாலா கிராமம் வழியாக பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை பகுதிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, நெடுஞ்சாலையில் வைத்து சமைக்கும் போராட்டத்தில் ஈடுபடவும் விவசாயிகள் முடிவு செய்து இருந்தனர். அப்போது, தடுக்கச் சென்ற காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவாக போராட்டக்காரர்கள், கர்நாடக அரசுக்கு எதிராகவும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் ஆகியோருக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காவல் துறையினர் வைத்து இருந்த பேரிகார்டுகளை போராட்டக்காரர்கள் மாட்டுவண்டிகளை வைத்து தகர்க்க முயன்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகள், “இது மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கை. கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதை மாநில அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், கைது செய்யப்பட விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

முன்னதாக, கர்நாடக மாநிலம் பிலிகுண்டுலுவில் உள்ள காவிரியில் இருந்து 24 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு 36.76 டிஎம்சி தண்ணீர் திறப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு முன்னதாக நீதிபதி கான்வில்கர் அமர்வில் விசாரிக்கப்பட்டது என்றும், ஆனால், அவரது ஓய்வுக்கு பின் அமர்வு அமைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இன்றைய தினமே (ஆகஸ்ட் 21) புதிய அமர்வு அமைக்கப்படும் என்றும், அந்த அமர்வு இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் புதிய அமர்வு..!

ABOUT THE AUTHOR

...view details