பெங்களூரு:கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை 189 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜக, 23 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 7 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சென்னாகிரி தொகுதி எம்.எல்.ஏ மதல் விருபக்சப்பாவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல், முடிகெரி தொகுதி எம்.எல்.ஏ குமாரசாமிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
காலகட்டகி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிம்பன்னவர், வடக்கு தேவநகரி தொகுதியின் ரவீந்திரநாத், ஹாவேரி தொகுதி எம்எல்ஏ நேரு ஓலேகர், மாயகொண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிங்கனா, பின்டூர் தொகுதி எம்எல்ஏ சுகுமார் ஷெட்டி ஆகியோரும் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.
இதுவரை இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், 2 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குர்மித்கல் தொகுதியில் லலிதா அனபூரும், கேஜிஎஃப் தொகுதியில் சம்பங்கியும் போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்த நாகராஜ் சப்பிக்கு, காலகட்டகி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஹிஜாப் விவகாரம் வெடித்த உடுப்பி தொகுதி எம்எல்ஏ ரகுபதி பட்டுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் ரகுபதி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. "கட்சியின் முடிவு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், கட்சி ஏற்படுத்திய இந்த மாற்றத்தின் விதம் தான் வலியைத் தருகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் தனக்கு ஹூப்ளி தொகுதியை ஒதுக்கும்படி மேலிடத்திடம் வலியுறுத்தி வரும் நிலையில், அந்த தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தனக்கு சீட் ஒதுக்கப்படாவிட்டால், சுயேச்சையாக போட்டியிடுவேன் என ஷட்டர் மிரட்டல் விடுத்துள்ளார். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 212 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 12 தொகுதிகள் எஞ்சியுள்ள நிலையில், 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (ஏப்ரல் 14) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரவுடி அடிக் அகமது மகன் ஆசாத் சுட்டுக் கொலை - உமேஷ் பால் கொலை வழக்கில் போலீசார் என்கவுன்டர்