அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப்பை வென்று, அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏறத்தாழ 40 ஆண்டுகால செனட்டர் சபை உறுப்பினராக இருந்து பின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு,பின் நடப்புத் தேர்தலில் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியான கமலா ஹாரிஸும் அமெரிக்காவின் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது அவரது உறவினர்கள் மற்றும் தமிழ்க்குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
"நான் முன்னர் சண்டிகரில் மருத்துவராக பணிபுரிந்த போது கமலா பலமுறை அங்கு வந்து என்னை பார்த்திருக்கிறார். கமலா தன் சிறுவயது முதல், நல்ல பண்புகளுடன் வளர்ந்தவள். அன்னை சொற்படி நடந்த அவள், எதையும் சிறப்பாக செய்து முடிப்பவள்; எதைச் சாதிக்க நினைத்தாளோ, அதை திறம்பட சாதித்தும் விட்டாள், கமலா", என்றார் அவரது சித்தி சரளா கோபாலன்.