தமிழ்நாடு

tamil nadu

கல்யாண் சிங் ஆட்சியும், பாபர் மசூதி இடிப்பு வழக்கும்..!

By

Published : Aug 21, 2021, 10:10 PM IST

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக கல்யாண் சிங் பொறுப்பு வகித்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

Kalyan Singh
Kalyan Singh

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக கல்யாண் சிங், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, புனித நகரமான அயோத்தியில் ஆயிரக்கணக்கான 'கர சேவகர்கள்' கூடியிருந்தபோது, கல்யாண்​​ சிங் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அவர் இந்த சம்பவத்திற்கு ஒருபோதும் வருத்தப்படவில்லை, அதைப் பற்றி பெருமிதம் கொண்டார்.

இது அவரை மிகப்பெரிய ராம பக்தன் எனவும் அயோத்தி ராமர் கோயில் கதாநாயகன் போலவும் காட்டியது. ராமர் கோயில் போராட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா இருந்தது. இது அரசியல் ரீதியாகவும் பாஜகவுக்கு பலனை பெற்றுகொடுத்தது. இந்து வாக்கு வங்கி உருவானது, இந்துக்கள் அதிகமுள்ள மாநிலங்களில் அடுத்தடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது.

கல்யாண் சிங் எடுத்த கடுமையான முடிவு

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அயோத்தியில் கர சேவகர்கள் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை சூழ்ந்திருந்தனர்.

அப்போது பைசாபாத் (தற்போதைய அயோத்தி) மாவட்ட ஆட்சியர் நிலைமை கட்டுக்குள் இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும். அதற்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்து அனுமதி கேட்டிருந்தார்.

இதற்கு கல்யாண் சிங் அனுமதி வழங்கவில்லை. மாறாக கூட்டத்தை கட்டுப்படுத்த மாற்று வழியை நாடுமாறும் கூறினார். அப்போதும் அலுவலர்கள் சட்ட விதியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பை அரசு அலுவலர்களால் தடுக்க முடியவில்லை. இது கல்யாண் சிங் பதவி விலக வழிவகுத்தது.

பாபர் மசூதி கட்டிய மிர் பாகி

முகலாய பேரரசர் பாபரின் ராணுவ தளபதியாக இருந்த மிர் பாகி அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து 1528இல் பாபர் மசூதியை எழுப்பினார் என்று கருதப்படுகிறது. இது கோடிக்கணக்கான இந்துக்களின் இதயங்களில் காயமாக உள்ளதென கல்யாண் சிங் நம்பினார்.

டிசம்பர் 2, 1992 குறித்து கல்யாண் சிங், “அந்த 3 நாள்கள் முக்கியமாக நிகழ்வுகள் நடந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டது, எனது அரசாங்கம் பதவி இழந்தது” என்றார். இதெல்லாம் ஒன்றை தெளிவாக எடுத்துகாட்டின. பாபர் மசூதி இடிப்பு வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்க அவர் விரும்பவில்லை.

ராமர் கோயில் பூமி பூஜை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என் வாழ்க்கையின் முக்கிய தருணம் என்று கல்யாண் சிங் எப்போதும் கூறிவந்தார். கடந்தாண்டு (2020) ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையிலும் கலந்துகொண்டார்.

அப்போது, “இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்களில் ஒன்றாகும். அயோத்தியில் ஒரு பெரிய ராமரை பார்ப்பது எனது வாழ்நாள் கனவாக இருந்தது. இன்று அது நிறைவேற்றப்பட்டது” என்று கூறினார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் என் அரசாங்கம் வீழ்த்தப்பட்டபோதும் நான் ஒருபோதும் வருத்தம் கொள்ளவில்லை என்று கூறினார்.

லிபரான் ஆணைய அறிக்கை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த லிபரான் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கல்யாண் சிங்கையும் வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்தது.

ஒரு முறை இந்த ஆணையத்தின் அறிக்கை குறித்து கல்யாண் சிங் ஊடகத்திடம் பேசுகையில், “இது ஒரு குப்பை, இதை கசக்கி குப்பையில் எறிவது மதிப்புக்குறியது” என்றார்.

அப்போது, “உயர் பாதுகாப்பில் இருந்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி, இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்” என்பதையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து, “இடிப்பைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன்” என்றும் கூறினார்.

இதையடுத்து அவரிடம் துப்பாக்கிச் சூடு நடத்த ஏன் அனுமதி அளிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பல்லாயிரக்கணக்கான ராம பக்தர்களின் உயிரை பறித்திடக் கூடும் என்பதால் அனுமதிக்கவில்லை. அந்தப் பாவத்தை நான் சுமக்க விரும்பவில்லை. இது ஒரு தற்செயலான சம்பவம். இதற்கு பின்னால் எந்தச் சதியும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க :பாபர் மசூதி இடிப்பு: லிபரான் அறிக்கையில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்கள்!

ABOUT THE AUTHOR

...view details