aபாரதியாருக்கும், புதுச்சேரிக்கும் இடையேயான பந்தம் - கலைமாமணி பட்டாபிராமன் சிறப்பு நேர்காணல் புதுச்சேரி: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141-வது பிறந்த தினம் இன்று(டிச.11) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாரதி பூங்காவில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அங்குப் பாரதியார் பாடல்கள் இசைக்க நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனிடையே பாரதியும், புதுச்சேரியும் என்பது குறித்து கலைமாமணி விருது பெற்ற தமிழ் விரிவுரையாளர் பட்டாபிராமன் ஈடிவி பாரத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அதில் "பாரதியாரின் புகழைப் பாடும் அளவிற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த 10 ஆண்டுகள், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கக் கனவு கண்டார். பாரதியார் அவரது வாழ்நாளில் 10 ஆண்டுகள் அதாவது மூன்றில் ஒரு பங்கு காலத்தை புதுச்சேரியில் கழித்திருக்கிறார். புதுச்சேரி மட்டுமில்லாமல் உலகமெங்கும் அவரது புகழ் பரவியுள்ளது.
மகாகவி பாரதியின் 141-வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் இன்று(டிச.11) சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. அவர் மகாகவி அதே நேரத்தில் வசனங்கவிதைகளும் எழுதியவரும் கூட, அவருக்கு புதுவை மண் தஞ்சம் அளித்தது. இந்த காரணத்தினாலேயோ என்னவோ பாவேந்தர் பாரதிதாசன் இவரது தொடர்பைப் பெற்றார். பாவேந்தர் பாரதிதாசனார் இவரால் பாராட்டப்பட்டவர். உலகப் புகழ்பெற்ற பாரதி மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இன்றும் இருந்து கொண்டு இருக்கிறார். அப்பேற்பட்ட அவருக்கு இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் உலகமெங்கும் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பாரதியாரின் பாடல்கள் மக்களை மிகவும் ஈர்த்துவிட்டன. அவரது பாடல்கள் அடி கரும்பு போல் இனிப்பு கொண்டவை கண்ணம்மா என் காதலி, கண்ணன் என் காதலன் மற்றும் தத்துவ பாடல்கள், குயில் பாட்டு, தோத்திரப் பாடல்கள், சுதேசி கீதங்கள் இப்படி கணக்கில் அடங்கா பாடல்கள் இன்னும் ஏராளம் என்றார் இவ்வாறு கவி மழையை பொழிந்தது புதுச்சேரியில் தான் அதிகம்” என்று கலைமாமணி தமிழ் விரிவுரையாளர் பட்டாபிராமன் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க:நலத்திட்ட உதவி - விடுபட்ட 52 மாற்றத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்!