டோரன்டோ : கனடா நாடாளுமன்றத்தில் நாஜி படையின் முன்னாள் அதிகாரி கவுரவிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து உள்ளார்.
இந்தியாவால் தேடும் நபர் என அறிவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த சீக்கிய குழு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாடினார்.
மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறுமாறு ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டது. இதனால் கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கனடா வந்து இருந்தார். அப்போது அவருடன் வந்து இருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹுன்கா கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார். அவருக்கு எம்.பிக்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை அளித்தனர்.
பின்னர், எம்.பிக்களால் கவுரவிக்கப்பட்ட நபர் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர்களுள் ஒருவர் என்றும் செய்தி பரவியது. கனடா நாடாளுமன்றத்தில் நாஜி படையின் அதிகாரி கவுரவிக்கப்பட்டதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச யூத மக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.