புதுச்சேரி: காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியின் பொன் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தை போல் சட்ட கல்லூரிகளிலும் தீர்ப்புகள் பாடமாக இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்திரேஷ், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், "புதுச்சேரியில் சட்ட பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, அது விரைவில் தொடங்கப்படும். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் படித்தவர்களில் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் தீதிமன்றத்தில் நீதிபதியாக பணியற்ற வாய்ப்பு கொடுங்கள். உயர் நீதிமன்றத்தின் கிளை புதுச்சேரியில் வர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறது. எனவே உயர் நீதிமன்ற கிளையை உருவாக்க வேண்டும்”, என்று வலியுறுத்தினார்.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டார்கள். அதனால் எப்போதும் வழக்கறிஞர்களை நாடு மதிக்கும். உயர் நீதிமன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞர்கள், நீதிபதிகளாக பெண்கள் இன்னும் அதிகம் இடம் பெற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு” என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், “துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசும்போது பெண்கள் அதிகளவு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும் என குறிப்பிட்டார். தமிழகம், ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட் உட்பட 5 மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அதிகளவு பெண்கள் உள்ளனர். தற்போது நிலைமை மாறி வருகிறது.
பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர். இதனால் வரும்காலத்தில் அதிகளவு பெண் வக்கீல்களும், நீதிபதிகளும் இடம்பெறுவார்கள். கடந்த காலங்களில் உச்ச நீதிம்னறம் ஒன்று அல்லது 2 பெண் நீதிபதி இடம்பெறுவதே அரிதாக இருந்தது. ஆனால், இப்போது 4 பெண் நீதிபதிகள் உச்ச நீதிம்னறம் உள்ளனர்.
வரும்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் அதிகளவில் இடம்பெறுவார்கள். தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தீர்ப்புகளை பாடமாக வைத்துள்ளனர். அதேபோல சட்ட கல்லூரிகளிலும் தீர்ப்புகள் பாடமாக இடம்பெற வேண்டும். அப்போதுதான் நீதித்துறை பணிகளில் மாணவர்கள் இடம்பெற வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:போதையில் இருவர் மோதல் - கத்தியால் ஒருவரைஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியீடு