கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கர்நாடக தேர்தலை பொறுத்தவரையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதால் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக இன்று(மே.1) தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு தலா ஒரு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
- பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
- ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.
- மாதந்தோறும் 5 கிலோ அரிசியுடன், 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும்.
- வீடில்லாத 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும்.
- எஸ்சி, எஸ்டி பெண்களின் வங்கி கணக்கில் 10,000 ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக 5 ஆண்டுக்கு வழங்கப்படும்.
- மூத்த குடிமக்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல்பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும்.
- வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
- 30,000 கோடி ரூபாய் செலவில், வேளாண் விளை பொருட்கள் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.
- 1,500 கோடி ரூபாய் செலவில், கல்யாண் கர்நாடகாவில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்.
இதையும் படிங்க: "நான் சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு" - விஷப்பாம்பு விமர்சனத்திற்கு பிரதமர் பதிலடி!