புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதில் பாஜகவுக்கு சபாநாயகர், இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதலில் பாஜக சார்பில் சபாநாயகராக செல்வமும், பின் நமச்சிவாயம், ஜான் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளும் பரிந்துரைக்கப்பட்டன. பின்னர் பட்டியலில் இருந்து ஜான்குமார் பெயர் நீக்கப்பட்டு, சாய் சரவணன் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
சிறுபான்மையினரைக் கவரும் விதத்தில்...
இதற்கு ஜான்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அமைச்சர் பதவி கேட்டு ஆதரவு எம்எல்ஏ-க்களுடன், டெல்லியில் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வலியுறுத்தினார், ஜான் குமார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, முதலமைச்சரின் டெல்லிப் பிரதிநிதியாக பதவி வகித்த தனக்கு, பாஜகவில் எந்தப் பதவியும் ஒதுக்கப்படவில்லை என ஜான்குமார் கட்சிப் பணியில் ஒதுங்கியிருந்து வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மேலும் அதற்கு பொறுப்பேற்று, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஏற்கெனவே சாமிநாதன் இரண்டு முறைத் தலைவர் பதவி வகித்துள்ளார். அதனால் அந்தப் பதவியை தனக்குத் தருமாறு ஜான் குமார் கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது சிறுபான்மையினர்களைக் கவரும் விதத்தில், ஜான் குமாருக்கு, புதுச்சேரி பாஜக தலைவர் பதவி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:சட்டப்பேரவை அலுவலகத்தில் தரையில் அமர்ந்தபடி பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!