ராஞ்சி (ஜார்க்கண்ட்): சட்டவிரோத சுரங்கம் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், 7வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இன்று (ஜன.03) அவரின் ஊடக ஆலோசகர் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்ட விரோத பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர், மாநிலத்தின் சுதந்திர தின விழா பணிகளில் இருப்பதாகக் கூறி ஆஜராக மறுத்துவிட்டார். அதன் பின்னர், 5 முறை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இருப்பினும் சோரன் ஆஜராகவில்லை. மேலும், தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் 'சட்டவிரோதமானது' என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், கடைசி வாய்ப்பாகக் கடந்த டிச.30ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதில், விசாரணைக்கு ஆஜராக அவருக்கு வசதியான தேதி மற்றும் நேரத்தில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே இன்று (ஜன.03) ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகரான அபிஷேக் பிரசாத் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அபிஷேக் பிரசாத் வீடு, சகேப்கஞ்ச் துணை கமிஷனர் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அரசு வேலை பெற்று தருவதாக மோசடி; ராணிப்பேட்டையில் கணவன் மனைவி கைது