ராஞ்சி : டெல்லி அவசர சட்ட எதிர்ப்பு விவகாரத்தில் ஜார்கண்ட் முதலமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்து உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரிகளை நியமனம் மற்றும் பணி மாற்றம் குறித்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று கூறி தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..
இந்த அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய அளவிலான எதிர்க் கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு உள்ளார். அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிராவில் தேசியவாதா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், ஜார்ஜண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, டெல்லி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பக்வந்த் மான் உள்ளிட்டோர் சந்தித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் விரைவில் கூட நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு கொண்டு உள்ள தாக்குதல் தீவிரமான ஒன்று எனக் கூறினார். டெல்லி மக்கள் விரோத சட்டத்தை நாடாளுமன்றத்தில் வீழ்த்த ஆதரவளிப்பதாக ஹேமந்த் சோரன் தெரிவித்து உள்ளதாக கூறினார். டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஜனநாயகம், அரசியலமைப்பு, நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் பக்கம் காங்கிரஸ் கட்சி உள்ளதா அல்லது பிரதமர் மோடியின் பக்கம் உள்ளதா என்று அக்கட்சி முடிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
அண்மையில் டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"தேசத் துரோக சட்டம் அவசியம்" மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 22வது சட்ட ஆணையம் பரிந்துரை!