சென்னை:நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம், உலகளவில் 735 கோடியைக் கடந்து வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெட் சில்லிஸ் எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஜவான்' படம் வெளியானதில் இருந்தே வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. முதல் நாளே ரூ.129.6 கோடி வசூலித்து, பாலிவுட் திரையுலகில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. மூன்றாவது நாள் படம் உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்தது.
5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம், 8 நாட்களில் ரூ.696.12 கோடியை வசூலித்து மிரட்டி வருகிறது. தற்போது வரை பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது 9 நாள் முடிவில் 'ஜவான்' படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.735.02 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜவான் படத்தின் தொடர் வசூல் வேட்டை படக்குழுவினருக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் ஜவான் சக்சஸ் மீட் மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, தீபிகா படுகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.