வாஷிங்டன்(அமெரிக்கா): 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருதை வென்ற பிறகு, கோல்டன் குளோப் விமர்சகர்களால் தேர்வு செய்யப்பட்ட விருதுகளின் 28-வது பதிப்பில் மேலும் இரண்டு விருதுகளை ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றியை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கொண்டாடி வருகிறார்.
இயக்குநர் ராஜமௌலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "பிரமாண்டமான ஜேம்ஸ் கேமரூன் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் பார்த்தார். அவர் அதை மிகவும் விரும்பினார்.
அவர் தனது மனைவி சுஜிக்கு பரிந்துரை செய்து அவருடன் மீண்டும் பார்த்துள்ளார். மேலும் 10 நிமிடங்கள் எங்களுடன் எங்கள் திரைப்படத்தை பற்றி பேசினார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் நான் உலகின் மேல் உள்ளேன்... இருவருக்கும் நன்றி"
இயக்குநர் ராஜமௌலியின் இன்ஸ்டாகிராம் பதிவைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். " உலகின் நம்பர் 1 இயக்குநருடன் இந்தியாவின் நம்பர் 1 இயக்குநர்" என்று ஒரு ரசிகர் வாழ்த்து தெரிவித்தார். மற்றொரு ரசிகர், " இரண்டு உன்னதமான இயக்குநர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் ஜேம்ஸ் கேமரூன்" என்று எழுதினார்.
"அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இந்த பெருமையை இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் கொண்டு வந்ததற்கு நன்றி எஸ்.எஸ்.ஆர். சார்” என ரசிகர்கள் பல்வேறு வகையில் ரசிகர்கள் தங்களது வாழ்த்து செய்திகளை தெரிவித்தனர்.
'ஆர்ஆர்ஆர்' இரண்டு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதையாகும். நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இதையும் படிங்க: லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலித்த ஜெய்ஹிந்த்..! விருது வழங்கும் மேடையில் ராஜமௌலி..