டெல்லி:அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று (ஜூலை 27) இந்தியா வந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இன்று (ஜூலை 28) ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இரு நாட்டு உறவு, குவாட் அமைப்பை (அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) வலுப்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.
முன்னதாக பிளிங்கன், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செய்து முடிந்த பணிகளுக்கும், இனி எதிர்வரும் காலங்களில் செய்யப்போகும் பணிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் வகையில் குவாட் வலுப்படுத்துவது, பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றிணைந்து செயல்படும் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஜெய்சங்கர், ஆண்டனி பிளிங்கன் இருவரும் இன்று மதியம் 2.30 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். அதன் பின்னர் பிளிங்கன் பிரதமரை சந்திக்க உள்ளார்.
இந்தியத் தலைவருடனான பேச்சுவார்த்தையின் போது பிளிங்கன், இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கோவிட்-19 சுகாதார ஒத்துழைப்பு, கரோனா தடுப்பூசி குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.