அயோத்யா:உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் எனத் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். இதனை, விமர்சித்த ஜகத்குரு பரமன் ஆச்சார்யா, “டெங்கு, மலேரியா போன்ற சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக தலைவரின் மகன் என்ன தைரியத்தில் கூறியிருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், உதயநிதியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது போஸ்டர்களை கிழித்து, தீயை வைத்து எரித்தார்.
தொடர்ந்து, உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அவர் அறிவித்திருக்கிறார். யாராலும் அவரது தலையை வெட்ட முடியாவிட்டால், தானே அதைச் செய்வதாகக் கூறியிருக்கிறார். மேலும், “உதயநிதியின் தந்தை மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் உறுப்பினர். அந்த கூட்டணித் தலைவர் ஒருவரின் மகன் இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் கூட்டணித் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின், வேறு எந்த மதத்தையாவது இவ்வாறு கூறியிருந்தால், இந்நேரம் அவரது கதை முடிந்திருக்கும்.
ஆனால், சனாதன தர்ம மக்கள் அகிம்சையை நம்புகிறார்கள் அதன் விளைவாகத் தான் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். கடந்த காலங்களிலும் சனாதன தர்மத்தை ஒழிக்கச் சதிகள் தீட்டிய அசுரர்கள் கொல்லப்பட்டனர். உதயநிதி உலகின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியிருக்கலாம், ஆனால் அவர் செய்த செயல்களுக்காக அவர் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்” ஜகத்குரு பரமன் ஆச்சார்யா கூறியுள்ளார்.