ஜம்மு காஷ்மீர் : டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் ஜி- 20 மாநாடு நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில், ஜி 20 அமைப்பை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஜி- 20 மாநாட்டை முன்னிட்டு, வளர்ச்சியை நோக்கிய பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜி 20 மாநாட்டிற்கான சுற்றுலா பணிக்குழு கூட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்னும் இரு தினங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அங்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், ஸ்ரீநகரில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், அவர்களின் கூட்டாளிகள் உள்ளிட்டோரின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். காஷ்மீர் பிரிவில் உள்ள ஸ்ரீநகர், புல்வாமா, குப்வாரா, அவந்திப்புரா, அனந்த் நாக் உள்ளிட்ட இடங்களிலும், ஜம்மு பிரிவின் பல்வேறு இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.
தெற்கு காஷ்மீர் பகுதியின் கூசு, நேஹ்மா, தாபர்புரா உள்ளிட்ட பகுதிகளில், அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடையவர்கள் அங்கு பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு சோதனைகள் நடைபெற்று உள்ளன. அங்கு சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம், மொபைல் போன் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டன.