தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 1, 2021, 12:10 PM IST

ETV Bharat / bharat

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது தேர்தலுக்காகவா? - பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று (ஏப். 1) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "51ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுகிறது.

இந்தியத் திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் எனத் திரைத் துறையில் அவரது பங்கு அளப்பரியது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து "தமிழ்நாட்டின் தேர்தல் காரணமாக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறதா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "கேள்வியைச் சரியாகக் கேளுங்கள். இது சினிமா உலகம் தொடர்பான விருது.

ஐந்து பேர் கொண்ட நடுவர் மன்றம் கூட்டாக ரஜினிகாந்தின் பெயரை முடிவுசெய்தது. இதில் அரசியல் எங்கிருந்து வந்தது.

ரஜினிகாந்த் கடந்த 50 ஆண்டுகளில் சினிமா உலகை ஆளுகிறார். மக்களை மகிழ்விக்கிறார். அதனால்தான் ஐந்து பேர் கொண்ட நடுவர் மன்றம் இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது. இந்த விருதுக்கும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, "தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என ட்வீட் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details