மும்பை: பீகார் தலைநகர் பாட்னா மற்றும் கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடந்த கூட்டு எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு பின், புதிதாக அமைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவின் (INDIA-Indian National Developmental Inclusive Alliance) மூன்றாவது கூட்டம், ஆக., 25 மற்றும் 26ல், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியும், சரத் பவார் தலைமையிலான NCP-யும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் மற்றும் மாநிலத் தலைவர் நானா படோலே ஆகியோர் விரைவில் NCP(Nationalised Congress Party) தலைவர் சரத் பவாரை சந்தித்து கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இறுதி செய்வார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தவ் தாக்கரே பிரிவு எம்எல்ஏ சச்சின் அஹிர், மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா(INDIA) கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் என்றும்; இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார் என்றும்; இந்தியாவின் முகம் யார் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் 26 முக்கிய அரசியல் கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள், தங்களது பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கு இந்தியா (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிட்டனர். முதல் கூட்டு எதிர்க்கட்சி கூட்டம் பீகாரில் நடைபெற்றது. ஜூன் 23 அன்று தலைநகர் பாட்னாவில் 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் கடந்த கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில், இந்தியக் கூட்டணி, "அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாக்க" தீர்மானம் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகிலுள்ள புலிகளில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன - ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!