பெங்களூரு:சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அன்று காலை 11.50 மணிக்கு சூரியனை நோக்கி பயணிக்கவுள்ள ஆதித்யா-எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் வரை சென்று சூரியனை ஆய்வு செய்யவுள்ளது.
சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது இந்தியா. இது குறித்த அறிவிப்பை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படும் நிகழ்வைக் காண பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் மூலம் சூரிய புயல், வெப்பம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கையில் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஆதித்யா-எல்1 முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவால் அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி C57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படவுள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கு இடையேயான லாக்ரேஞ்ச் புள்ளி (L1)-யை அடைந்து, அங்கு ஒரு வட்டப்பாதையை அமைத்து ஆதித்யா-எல்1 ஆய்வு மையமாக செயல்படவுள்ளது.
பூமியில் இருந்து லாக்ரேஞ்ச் புள்ளியை சென்றடைய ஆதித்யா-எல்1-க்கு 4 மாதங்கள் ஆகும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து ஏவப்படும் ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை முடித்துக்கொண்டு அதாவது புவியின் ஈர்ப்பு விசையை கடந்த பிறகு, அங்கிருந்து வெளியேற்றப்படும்.