சென்னை: சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்குப் பிறகு, ஆதித்யா L1 என்ற திட்டத்தை வெற்றிகரமாக இஸ்ரோ நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து மிகப்பெரிய திட்டமாக பார்க்கப்படக்கூடிய ககன்யான் திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படும் மனிதர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் வாகனத்தின் சோதனையை இஸ்ரோ தற்போது தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தியை இஸ்ரோ தன் X வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும், வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் வாகனத்தின் சோதனையை தற்போது இஸ்ரோ தொடங்கியுள்ளது. ககன்யான் பயணத்திற்கான ஆளில்லா விண்கல சோதனைகளை இஸ்ரோ தொடங்கிய நிலையில், இதற்காக விண்கல சோதனை வாகன அபார்ட் மிஷன்-1 (டிவி-டி1)-க்கான தயாரிப்புகள் நடந்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டம் என்பது மனிதர்கள் வாழக்கூடிய வகையிலான காப்ஸ்யூலை உருவாக்கி, விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் ஆகும். காப்ஸ்யூல் என்பது விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல வடிவமைக்கப்ப்பட்ட ஒரு விண்கலம். இதன் மூலம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு மூன்று நாட்களுக்கு 400 கிமீ (250 மைல்) சுற்றுப்பாதையில் பயணிக்க முடியும்.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டுப் போட்டி; வில்வித்தையில் தங்கம், வெண்கலம் வென்ற வீராங்கனைகள்!
இந்த கலத்தில் விண்வெளி வீரர்களுக்கான மூன்று இருக்கைகள், ஒரு விளக்கு அமைப்பு மற்றும் அறைக்குள் உள்ள பல்வேறு அளவுருக்களை கண்காணிக்க இரண்டு காட்சித் திரைகள் ஆகியவை இருக்கும். இந்த மூன்று நபர்களும் 400 கி.மீ. சுற்றுப்பாதையில் மூன்று நாள் பணிகள் முடித்ததை தொடர்ந்து இந்தியப் பெருங்கடலில் தரையிறங்குவதன் மூலம், அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (எஸ்ஏசி) இயக்குனர் நிலேஷ் தேசாய் முன்னதாக கூறுகையில், “பிரதமர் மோடி 2018ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின்போது ககன்யான் திட்டத்தை 2022ஆம் ஆண்டிற்குள் அடையும் இலக்குடன் அறிவித்தார்.
இருப்பினும், கரோனா தொற்றுநோய் காரணமாக திட்டத்தின் வேகம் தடைபட்டது. இப்போது விண்வெளி நிறுவனம் 2024ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்தை தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் “இந்த சோதனை கலத்தின் பணியானது ஒட்டுமொத்த ககன்யான் திட்டத்தின் முக்கியப் பகுதி எனவும், இந்த சோதனை விமானத்தின் வெற்றியானது, மீதமுள்ள தகுதி சோதனைகள் மற்றும் ஆளில்லாப் பயணங்களுக்கு களம் அமைப்பதோடு, இந்திய விண்வெளி வீரர்களைக் கொண்ட முதல் ககன்யான் பயணத்திற்கு வழிவகுக்கும்” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை வென்ற இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து!