ஹைதராபாத்: நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை, பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. இதனை இஸ்ரோ தற்போது வெளியிட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக ‘X' வலைதளப் பக்கத்தில் இஸ்ரோ ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது.
அந்த பதிவில், “ஸ்மைல் ப்ளீஸ்.. இன்று காலை விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவரை புகைப்படம் எடுத்து உள்ளது. இந்த கலத்தின் புகைப்படமானது, ரோவரில் பொருத்தப்பட்டு உள்ள நேவிகேஷன் கேமரா (Navigation Camera) மூலம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திரயான் 3 விண்கலத்திற்கான நேவிகேஷன் கேமராவை எல்க்ட்ரோ-ஆப்டிக்ஸ் அமைப்பின் ஆய்வகம் (aboratory for Electro-Optics Systems - LEOS) மேம்படுத்தி உள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமல்லாமல், சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து, ஒவ்வொரு அப்டேட்டையும் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் நிலவில் காலடி எடுத்த வைத்த நான்காவது நாடாக மாறிய இந்தியா, நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடாகாவும் திகழ்கிறது.
இதற்கு உலகத் தலைவர்கள் பலரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அது மட்டுமல்லாமல், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளையும் நேரில் சந்தித்த பிரதமர் மோடி, ஆகஸ்ட் 23ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தார். அதேநேரம், சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று இஸ்ரோ வெளியிட்ட பதிவின் அடிப்படையில், நிலவின் முதற்கட்ட ஆய்வில் வரைபடம் மூலம் கணக்கீடு செய்து நிலவின் மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) டைட்டானியம் (Ti), மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகிய தனிமங்கள் இருப்பதை உறுதிபடுத்தி உள்ளது.
மேலும், ஹைட்ரஜன் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இஸ்ரோ தனது வரலாற்று தடத்தின் தொடர்ச்சியாக, வருகிற செப்டம்பர் 2 அன்று சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க:நிலவின் தென் பகுதியில் சல்பர் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர்!