ஐதராபாத் :சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டா் கருவி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ள இஸ்ரோ, இதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
பூமியைச் சுற்றி வந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடா்ந்து கடந்த 1ஆம் தேதி புவியீா்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் விலக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது. மேலும் சந்திரயான் 3 விணகலத்தின் சுற்றுப்பாதை அடுத்தடுத்த நாட்களில் மேலும் குறைக்கப்பட்டு நிலவுக்கும் விண்கலத்திற்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டது.
நேற்று (ஆகஸ்ட். 16) நான்காவது முறையாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்பட்டது. மேலும் 100 கிலோ மீட்டர் தொலைவிலான சந்திர அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. நாளை (ஆகஸ்ட் 17) சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் லேண்டர் தனியாக பிரித்து பயணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்த இருந்த நிலையில் தற்போது அந்த முயற்சி வெற்றி பெற்று உள்ளதாக இஸ்ரோ கூறி உள்ளது.
நிலவை ஒட்டிய இறுதிக்கட்ட சுற்றுப் பாதையில் பயணித்த சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டரை இன்று (ஆகஸ்ட். 17) பகல் 1 மணிக்கு வெற்றிகரமாக பிரித்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர். அடுத்த கட்டமாக லேண்டரின் வேகத்தை குறைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
அதன் அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலத்தில் உள்ள புரபல்சன் உந்துவிசை தொகுதியின் இயக்க நடவடிக்கை சோதனை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். திட்டமிட்டபடி அனைத்து கட்டங்களையும் சந்திரயான் 3 விண்கலம் கடந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 21 பேர் மீது வழக்கு - சிபிஐ தகவல்!