ஐதராபாத் :நிலவின் சுற்றுப்பாதைக்கு நுழையும் போது சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ள இஸ்ரோ, இதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் விணகலத்தின் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ள நிலையில், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள ஈர்ப்பு விசையின் மூலம் விண்கலத்தை இயக்குவதன் மூலம் வீண் எரிபொருள் விரயம் உள்ளிட்டவைகளை தடுக்க முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக பூமியின் சுற்றுவட்ட பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணியில் கடந்த 15ஆம் தேதி முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். பூமியின் முதல் சுற்றுவட்ட பாதையில் 15ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்தடுத்த கட்டமாக ஜூலை 17ஆம் தேதி இரண்டாவது வட்ட பாதையிலும், 3வது வட்ட பாதைக்கு 18ஆம் தேதியிலும், அதேபோல் 4வது வட்ட பாதைக்கு 20ஆம் தேதியும் நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை 25) மதியம் 2.47 மணிக்கு 5வது வட்ட பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது இதையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.