ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான எக்ஸ்போசாட் உடன் பிஎஸ்எல்வி சி-58 (PSLV-C58) விண்ணில் சீறிப்பாயந்தது. இதற்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று (ஜன.1) காலை 9.10 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது.
விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான (ISRO) சாா்பில் எக்ஸ்போசாட் (xposat) எனும் அதிநவீன செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.
469 கிலோ எடை கொண்ட எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. எக்ஸ்போசாட், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. இதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய இரண்டு முக்கிய சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க:370 சட்டப்பிரிவு ரத்து முதல் தன்பாலின ஈர்ப்பாளர் திருமண விவகாரம் வரை.. உச்ச நீதிமன்றத்தின் கவனிக்க வைத்த தீர்ப்புகள் 2023!
இவை விண்வெளியில் ஊடுகதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு, கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை ஆராயும் திறன் கொண்டவை.
இது தவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். ஏற்கெனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ (ISRO) அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனிடையே, ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆர்பிட்டர் தனது செயல்பாடுகளை சரியாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட்டில் திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைக்கோளும் இருந்தது. 2024ஆம் ஆண்டில் முதல் ராக்கெட்டாக விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்விக்கு இது 60வது விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிறந்தது 2024 புத்தாண்டு.. வர்ண ஜாலங்களுடன் வரவேற்ற பொதுமக்கள்!