ஹைதராபாத்: சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிலவில் தரை இறங்குவதற்கான செயல்பாடுகளை, இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சந்திரயான் 3 விண்கலம், திட்டமிட்டபடி, அதன் பயணத்தை தொடர்ந்து வருவதாகவும், நாளைய தினம் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில், விண்கலம் தரையிறங்கும் என்று இஸ்ரோ வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் 70 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து, சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் நிலை கண்காணிப்பு கேமரா எடுத்த நிலவின் புகைப்படங்களை, இஸ்ரோ, தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த புகைப்படங்கள், லேண்டர் தொகுதியில், அதன் நிலையை (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) நிர்ணயம் செய்வதன் மூலம் அவற்றை ஒரு உள் நிலவு குறிப்பு வரைபடத்துடன் பொருத்திக் கொள்ள உதவும் வகையில் உள்ளதாக, இஸ்ரோ குறிப்பிட்டு உள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம் திட்டமிட்டபடி, சீரான முறையில் நடைபெற்று வருகிறது. வழக்கமான சோதனை நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் சாதனம், கடந்த 17ஆம் தேதி, விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றது. லேண்டர் சாதனம், நிலவில் நாளை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) மாலை 6:04 மணிக்கு தரை இறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில், சூரிய வெளிச்சம் மிகவும் குறைவான நேரமே இருப்பதன் காரணமாக, இந்த பகுதியில், இதுவரை எந்த ஒரு சர்வதேச நாடும் ஆய்வு மேற்கொண்டது இல்லை. அங்கு நிலவி வரும் நேரம் மற்றும் காலநிலை உள்ளிட்ட தரவுகளை கணக்கிட்டு தான், அங்கு, விண்கலத்தை தரையிறக்க முடியும். இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20ஆம் தேதி) தரைக் கட்டுப்பாட்டு அமைப்பு உடனான தொடர்பினை இழந்த நிலையில், நிலவில் விழுந்து நொறுங்கியது. இதன்காரணமாக, நிலவின் தென் துருவப் பகுதியை ஆராயும் ரஷ்ய நாட்டின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாடுகளின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்து உள்ள சந்திரயான் 3 லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, இஸ்ரோ, நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்த நிகழ்வு, இஸ்ரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://isro.gov.in என்ற தளத்திலும், இஸ்ரோ நிறுவனத்தின் யூடியூப் பக்கத்திலும், இஸ்ரோ நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்திலும் மற்றும் மேலும், டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் நேரலை ஒளிபரப்பப்பட உள்ளது.
இதையும் படிங்க: நிலவை தொட்ட சந்திராயன்கள்..! சவால்கள் நிறைந்த சந்திராயன்களில் தமிழர்களின் பங்களிப்பு!