தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி - ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமா? - ஒற்றைத்தலைமை ஆட்டத்தில் காய் நகர்த்துகிறதா பாஜக?! - OPR

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் வலுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி - ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமா? - ஒற்றைத்தலைமை ஆட்டத்தில் காய் நகர்த்துகிறதா பாஜக?
பிரதமர் மோடி - ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமா? - ஒற்றைத்தலைமை ஆட்டத்தில் காய் நகர்த்துகிறதா பாஜக?

By

Published : Jun 24, 2022, 6:23 PM IST

டெல்லி: சென்னை வானகரத்தில் நேற்று (ஜூன் 23) உள்ள மண்டபத்தில் வைத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு தொடங்குவதற்கு முன்னரே, அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒற்றைத்தலைமை குறித்த முழக்கங்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் மேடையில் ஏறியது முதல் ஒற்றைத்தலைமை குறித்த சலசலப்பு அதிகரிக்கத்தொடங்கியது. பின்னர், தொடங்கிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, “ஒற்றைத்தலைமையுடன் எப்போது பொதுக்குழு கூடுகிறதோ, அப்போது தான் 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்” எனக் கூறினார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென, “23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது” என ஆவேசமாகப் பேசினார். இதற்கிடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அண்ணன் ஓபிஎஸ்..” என்று பேசினார். ஆனால், வேறு எவரும் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை. இந்நிலையில், கூட்டம் நடைபெறும்போதே ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேடையில் இருந்து இறங்கிச்சென்றனர்.

அப்போது, ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதும், ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் பஞ்சர் செய்யப்பட்டதும் என மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. மேலும் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை, நிரந்தர அவைத்தலைவராக அறிவிக்கப்பட்ட தமிழ் மகன் உசேனிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, “வருகிற ஜூலை 11அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்” என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மேடையிலேயே அறிவித்தார். அடுத்தடுத்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர் செல்வம் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர், நேற்றிரவு ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றார். அப்போது இவருடன் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் சென்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல்

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். எனவே அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக செல்கிறேன்” என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.

இதன்படியே, இன்று (ஜூன் 24) பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்ட குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அப்போது பிரதமர் மோடி, ஓ.பன்னீர் செல்வம் உட்பட பலரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இது வெளிப்படையாக இருந்தாலும், ஆளும் கட்சியான பாஜகவின் ஆதரவு தமக்கு வேண்டும் என்பதாலும், ஒற்றைத்தலைமை விவகாரத்தில் சட்டத்தை (உச்ச நீதிமன்றம்) சரியாக அணுகி வெற்றி பெற வேண்டும் என்பதாலும் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பின்போது, அதிமுக - பாஜக கூட்டணி, அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்தை, அவரது சென்னை அரசினர் இல்லத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"ஓபிஎஸ் பொது மன்னிப்பு கேட்டார்”... ”அதிமுகவில் இரட்டை தலைமை பதவிகள் காலாவதி” - சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details