டெல்லி:இந்திய ரயில்வே தனது பல்வேறு வகையான சேவையை ‘இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்’ (IRCTC) என்ற தளம் வழியாக பயணச்சீட்டு, கேட்டரிங் மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜூலை 25) காலை முதல் ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் செயலி ஆகியவை முடங்கியது. இதனால், ரயிலில் பயணம் செய்யவிருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஐஆர்சிடிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஐஆர்சிடிசியின் ட்விட்டர் பக்கத்தில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் அதன் சேவைகள் கிடைக்கவில்லை.
இந்த பாதிப்பை ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தின் (CRIS) தொழில்நுட்ப பிரிவுக் குழுவினர் சரி செய்து வருகின்றனர். எனவே, அமேசான் (Amazon) மற்றும் மேக் மை ட்ரிப் (Makemytrip) போன்ற தளங்களின் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திடீர் சேவை பாதிப்பால், ரயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும், நாளை திடீரென பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். ஏனென்றால், ரயிலில் ஏசி வகுப்புகளுக்கான தட்கல் (Tatkal Booking) முன்பதிவு காலை 10 மணிக்கும், படுக்கை வகுப்புக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணிக்கும் திறக்கப்படும். ஆனால், இணையதள் சேவையில் ஏற்பட்ட பாதிப்பால் இந்த வகை பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:சிறப்பு விமான சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்திய IRCTC!