தந்தையாக, சகோதரனாக , மகனாக, கணவனாக, தோழனாக நம் வாழ்வில் முக்கிய பங்காற்றும் ஆண்களை கொண்டாடும் வகையில் இந்தியா உள்பட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த உலகில் ஆண்களின் பங்கை கொண்டாடும் வகையிலும் சமூகத்தில் ஆண்களும் சிறுவர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச ஆண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாலின உறவு மேம்பாடு, பாலின சமத்துவம், ஆண் முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவது, ஆண்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, “ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியம் (Better health for men and boys) என்ற தலைப்பில் இந்தாண்டு ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆண்கள் தின வரலாறு
சர்வதேச ஆண்கள் தினம் முதலில் 1992ஆம் ஆண்டு தாமஸ் ஓஸ்டர் என்பவரால் முன்மொழியப்பட்டது. ஓர் ஆண்டிற்கு பின், ஆண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
1999ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிலுள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் டாக்டர் ஜெரோம் டீலுக்கிங் என்பவர் இந்த தேதியை முன்மொழிந்தார்.
டாக்டர் ஜெரோம் டீலுக்கிங்கின் தந்தை நவம்பர் 19ஆம் தேதி பிறந்தவர். மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் 1989இல் இதே நவம்பர் 19ஆம் தேதிதான் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டு மக்களை கால்பந்து மூலம் நாட்டை ஒன்றிணைத்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.
ஆண்கள் தினத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், உலகெங்கும் உள்ள ஆண்களும் சிறுவர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசும் நாளாக இந்நாளை முன்னெடுக்க டாக்டர் டீலூக்ஸிங் விரும்பினார். மேலும் ஆண்கள் தினம் கொண்டாடப்படும் நவம்பர் 19, எதேர்ச்சையாக மூவ்ம்பருடன் ஒத்துப்போகிறது.
அதாவது இந்த மாதம் (நவம்பர்) முழுவதும் ஆண்கள் முடிகளை வெட்டாமலும் தாடிகளை ஷேவ் செய்யாமலும் இருந்து, அதன் மூலம் சேகரிக்கும் பணத்தை ஆண்களின் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துவார்கள்.
இந்தியாவில் சர்வதேச ஆண்கள் தினம்
இந்தியாவில் முதன்முதலில் 2007ஆம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது முதல் இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள ஆண்களின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தியாவில் ஆண்கள் தினம் பெரியளவில் கொண்டாடப்படுவது இல்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே இந்நாள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து பொதுவெளியில் பேசவும் அவர்களின் உரிமைகள் குறித்து குரலெழுப்பவும் மக்களை ஊக்குவிக்கின்றன.
பாலின சமத்துவம் பேசும் உலகில் சர்வதேச ஆண்கள் தினத்தின் முக்கியத்துவம்
- சமூகம், குடும்பம், குழந்தை பராமரிப்பு ஆகியவற்றின் ஆண்களின் பங்களிப்பைக் கொண்டாடுவது.
- ஆண்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துவது.
- ஆண்களுக்கு எதிரான பாகுபாட்டை முன்னிலைப்படுத்துவது.
- பாலின உறவுகளை மேம்படுத்தவும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும்
ஆண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சமூக பிரச்னைகள் குறித்த புள்ளிவிவரங்கள்:
ஆண்கள் தற்கொலை
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் 70.2 விழுக்காடு ஆண்கள், 29.8 விழுக்காடு பெண்கள். மேலும், தற்கொலை செய்துகொண்ட ஆண்களில் சுமார் 68.4 விழுக்காடு திருமணம் ஆனவர்கள்.
போதை மருந்து மற்றும் மதுவால் ஏற்படும் மரணம்
இந்தக் காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் ஆண்கள். 2019 ஆம் ஆண்டில், போதைப்பொருள் மற்றும் மது அடிமையாதல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மொத்த 7860 பேரில் 7719 பேர் ஆண்கள்.
இது தற்கொலை செய்துகொண்டவர்களில் 98.2 விழுக்காடாகும். 2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில் இதுதான் அதிகம். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, மதுவால் ஏற்படும் உடல் நலக்கோளாறு மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஏற்படும் சாலை விபத்துகள் ஆகியவை காரணமாக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 2.6 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர்.