ஹாங்சோவ்:19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இன்று (செப்.25) நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 1893.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதேபோல், ஆடவர் துடுப்பு படகு காக்லெஸ் 4 பேர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது. ஆடவருக்கான நான்கு பேர் குழு படகுப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் ஆஷிஷ் குமார், பீம் சிங், ஜஸ்விந்தர் சிங் மற்றும் புனித் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய துடுப்பாட்ட அணி 6:10.81 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆண்களுக்கான ஒற்றையர் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 7:08.79 என்ற நேரத்தில் நான்காவது இடத்தைப் பிடித்து உள்ளார். முன்னதாக நடந்த ஆடவர் துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அதனைத் தொடர்ந்து, ஆண்களுக்கான துடுப்பு படகு இறுதிப் போட்டியில், லெக் ராம் மற்றும் பாபு லால் யாதவ் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றனர். மேலும், 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் துடுப்பு படகு போட்டி காக்ஸட் பிரிவில் எட்டு பேர் குழு இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள், 05:43.01 என்ற விநாடியில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
நீரஜ், நரேஷ் கல்வானியா, நீதிஷ் குமார், சரண்ஜீத் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் 2.84 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் ஒரு தங்கம் உள்ளிட்ட ஏழு பதக்கங்களை வென்றுள்ளது.
இதையும் படிங்க:Asian Games 2023: இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி தங்கம் வென்றது! உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!