ஹைதராபாத்:தொழில்நுட்ப யுகம் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் அறிமுகமாகின்றன. அந்த வகையில் கூகுளுக்கு சவால் விடும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் ஓபன் ஏஐ(Open AI) நிறுவனம், சாட் ஜிபிடி (Chat GPT) என்ற தேடு பொறி செயலியை அறிமுகம் செய்தது. தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றதால், சாட் ஜிபிடி-யின் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நாம் கேட்கும் கேள்விக்கு ஓரளவுக்கு துல்லியமான விடையை தருவது இந்த செயலியின் சிறப்பம்சம்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூவில் செயல்படும் Analytics India Magazine நிறுவனம், சாட் ஜிபிடி செயலியின் திறனை பரிசோதிக்க முடிவு செய்தது. அதன்படி, 2022ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வின் 100 கேள்விகள் கேட்கப்பட்டன. புவியியல், பொருளாதாரம், வரலாறு, அறிவியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் மொத்தம் 100 கேள்விகளில், 54 கேள்விகளுக்கு மட்டுமே சாட் ஜிபிடி சரியான பதிலை அளித்தது.
அறிவியல், புவியியல், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவறான விடைகளை அளித்தது. இதுகுறித்து கூறியுள்ள ஏஐஎம் நிறுவனம், "2021 செப்டம்பர் மாதம் வரையிலான தரவுகள் மட்டுமே சாட் ஜிபிடியிடம் உள்ளன. நடப்பு நிகழ்வுகள் குறித்த விவரம் அதனிடம் இல்லை. பொருளாதாரம், புவியியல் குறித்த கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்கவில்லை" என தெரிவித்துள்ளது.