டெல்லி :உலகின் வலிமையான பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 80வது இடம் கிடைத்து உள்ளது. லண்டனைச் சேர்ந்த ஹான்லி பாஸ்போர்ட் இண்டக்ஸ் என்ற நிறுவனம் உலக நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
பயங்கரவாதம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து இந்த பாஸ்போர்ட் தரவரிசை வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்து உள்ளது. முன்னதாக ஜப்பான் கடந்த் ஐந்து ஆண்டுகளான இந்த தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றி இருந்தது.
தற்போது ஜப்பானை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. ஜப்பான் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்த பட்டியலில் 80வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியா 85வது இடத்தில் இருந்தது. தற்போது 5 இடங்கள் முன்னேறி 80வது இடத்தை பிடித்து உள்ளது.
இந்த தரவரிசையின் மூலம் இந்தியர்கள் முன்னதாகவே விசா பெறாமல் 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த 57 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, அதன் பின் அந்நாட்டின் அரசின் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். தற்போது வரை இந்தியர்கள் உலகளவில் 177 நாடுகளுக்கு செல்ல விசா கட்டாயமாக தேவைப்படுகிறது.
அதில் ரஷ்யா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி பூடான், நேபாளம், மாலத்தீவு, செனகல், சுரிநேம், மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விச இல்லாமல் சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.