டெல்லி:சத்ரபதி சிவாஜியின் ராஜமுத்திரையை பிரதிபலிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட, கடற்படையில் அட்மிரல் பொறுப்பு வகிப்பவர்களுக்கான புதிய தோள்பட்டை இலச்சினையை (Epaulettes) இன்று கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினத்தன்று மகாரஷ்டிரா மாநிலம், சிந்துர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலையைத் திறந்து வைத்த பின், பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, கடற்படையில் அட்மிரல் பொறுப்பு வகிப்பவர்களின் தோள்பட்டை இலச்சினை வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. தங்க நிறத்திலான கடற்படை சின்னம், எட்டு திசைகளைக் குறிக்கும் வகையிலான எண்கோணம், வாள், தொலைநோக்கி ஆகியவற்றுடன் சத்திரபதி சிவாஜியின் ராஜமுத்திரையும் இந்த புதிய தோள்பட்டை இலச்சினையில் இடம் பெற்றுள்ளது.
இந்திய கடற்படையின் அட்மிரல் (Admiral), வைஸ் அட்மிரல் (vice Admiral) , சர்ஜ் வைஸ் அட்மிரல் (surg vice Admiral), சர்ஜ் ரியர் அட்மிரல் (surge rear Admiral), ரியர் அட்மிரல் (rear Admiral) ஆகிய பொறுப்பு வகிப்பவர்களுக்கான தோள்பட்டை இலச்சினையில் இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.