டெல்லி : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் திட்டத்தின் முன்னோட்டமாக, கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு திமுக உள்ளிட்ட 19 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மே. 10ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை கைப்பற்றிய போதும் ஆட்சியை நடத்தும் முதலமைச்சரை தேர்வு செய்வது என்பது காங்கிரஸ் கட்சிக்கு இடியாப்ப சிக்கல் போன்று காணப்பட்டது.
ஒருவழியாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கர்நாடக முதலமைச்சரகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கர்நாடகாவின் காங்கிரசின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய டி.கே. சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சித்தராமையாவை முதலமைச்சராக அறிவித்தது, சிவகுமாரின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
மேலும், கட்சியின் மீது உள்ள விருப்பத்தின் காரணமாக துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதாக டி.கே. சிவகுமார் தெரிவித்தார். இதனால் 4 நாட்கள் தொடர்ந்து நிலவிய நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. வரும் சனிக்கிழமை கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பதவியேற்பு விழாவிற்கான நேரம் மிகக் குறைவாக உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தென் மாநிலங்களின் திறவுகோளாக காணப்பட்ட கர்நாடகாவின் பாஜக தோல்வியை தழுவியது அந்த கட்சிக்கு பெருத்த பின்னடைவு என்றே கூறலாம். நாடு முழுவதும் நிலவும் பாஜக எதிர்ப்பு அலைதான் இந்த தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் நாட்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக மிகுந்த கவனமுடன் காய்களை நகர்த்தும. அதேநேரம் தற்போதைய சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ள காங்கிரஸ், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதன் முன்னோட்டமாக கர்நாடக் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு பாஜக எதிர்ப்பு கட்சிகளை அழைக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள திமுக உள்பட நாடு முழுவதும் 19 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்ரே அணி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கேரளா காங்கிரஸ் என நாடு முழுவதும் உள்ள பாஜக எதிர்ப்பு அரசியல் நோக்கம் கொண்ட 19 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்... 4 நாட்களில் அடுத்தடுத்த திருப்பம்..