Election Commission:டெல்லி: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்ற காலம் விரைவில் காலாவதியாக உள்ளது. இதையடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் கூறுகையில், "வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து சட்டமன்றம் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயா மற்றும் திரிபுரா மாநில சட்டமன்றங்கள் முறையே மார்ச் 15 மற்றும் 22ஆகிய தேதிகளில் காலாவதியாகின்றன.
இதையடுத்து மூன்று மாநில சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 16ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி ஒரே கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 3 மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்’’ என்றார்.
திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனு மீதான பரிசீலனை ஜனவரி 31ஆம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ஆம் தேதி கடைசி நாள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய ஜனவரி 30ஆம் தேதி கடைசி நாள் என்றும், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலத் தேர்தல் மனுதாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள 9ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 73 சதவீத வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியுள்ளார்.