டெல்லி: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை வருகிற அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை முழுமையாக இந்தியாவில் நடக்கிறது. இதுவரை 3 முறை இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தி உள்ளது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. அதன் பிறகு கடைசியாக 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன் டிராபியை தோனி தலைமையிலான அணி வென்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அணி எவ்வித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. அதனால் இம்முறை இந்தியா மண்ணில் நடக்க இருக்கும் இந்த ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.
இதன் காரணமாக பிசிசிஐ அணியில் வீரர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், உலக கோப்பைக்கு இந்திய அணியை எவ்வாறு அமைப்பது? எந்த வீரரை எந்த இடத்தில் இறக்குவது என்ற இது போன்ற ஆலோசனைகளையும் பல முன்னாள் இந்தியா வீரர்கள் மட்டுமின்றி பிற நாட்டு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:World athletics championships: அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் மூன்றாவது முறையாக சாம்பியன்!
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; “இந்திய அணியில் 4வது இடத்தில் களம் இறங்கும் வீரர் பற்றி விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது. விராட் கோலி அந்த இடத்தில் இறங்குகிறார் என்ற வதந்தியையும் கேள்விப்பட்டேன். இவ்வாறு விராட் கோலி நான்காம் இடத்தில் களம் இறங்கினால் நான் அதை முழுமையாக ஆதரிக்கிறேன். அவர் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன். அவரால் அங்கிருந்து இன்னிங்ஸை கடைசி வரை கொண்டு செல்ல முடியும்.
அவர் இந்த இடத்தை எடுத்து கொள்வாரா என எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் அதை செய்ய வேண்டும் என நான் விரும்புகின்றேன். அவர் மூன்றாவது இடத்தில் இறங்குவதை விரும்புகிறவர் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. அவர் அந்த இடத்தில் ஏராளமான ரன்களை அணிக்காக அடித்து இருக்கிறார். ஆனால், நாள் முடிவில் எதாவது செய்ய வேண்டும் என்றால் கையை உயர்த்தி அதை அணிக்காக செய்து ஆக வேண்டும் என்றார்.
ஆசிய கோப்பையை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணி இரண்டுமே முன்னணி அணிகளாக இருக்கக் கூடியவை, இருப்பினும் பெரிய அணிகளை வீழ்த்தக் கூடிய வலிமை இலங்கை அணிக்கு உள்ளது என கூறினார்.
மேலும், 4வது இடம் குறித்து இந்திய நட்சத்திர வீரர் அஸ்வின் கூறியதாவது; “யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரின் ஓய்வுக்கு பிறகு மிடில் ஆடரில் நம்பிக்கையான பேட்ஸ்மேனை இந்திய அணி நீண்ட நாட்களாக தேடி வந்தது. அந்த இடத்தை கே எல் ராகுல் நிரப்பிவிட்டார் என நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய பிரணாய் - சாத்விக்/சிராக் ஷெட்டி தோல்வி