ஜம்மு: 74-வது குடியரசுத் தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கடமையின் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொடி ஏற்றி குடியரசு தின விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்வில் பிரதமர் மோடி, எகிப்து அதிபர் சிசி, ராணுவ தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு துறை செயலர்கள், முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், முப்படை வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய மாணவர் படை உள்ளிட்ட அணிவகுப்பு நடைபெற்றன. கம்பீரமான பீரங்கிகள், டாங்கிகள், நவீன போர் விமானங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் உபகரணங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றன.
இந்திய விமானப் படையின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் குழுமியிருந்த பார்வையாளர்களை குதூகலிக்கச் செய்தது.இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் கொடியேற்றப்பட்டு பல்வேறு சாகச நிகழ்வுகளில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் குடியரசு தினத்தை கொண்டாடினர்.