டெல்லி:நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று (டிசம்பர் 7) குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மாநிலங்களவைசபாநாயகராக பொறுப்பேற்றார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாம் அமிர்தகாலப் பயணத்தை நோக்கி நடைபோட்டு வருகிறோம். இந்த அமிர்தகாலம், வளர்ச்சி மற்றும் பெருமையின் காலகட்டமாக மட்டுமல்லாமல், உலகிற்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் காலமாகவும் இருக்கும்.
இந்தியாவின் பங்களிப்பு உலகளவில் அதிகரித்து வரும் சூழலில், ஜி20 தலைமைத்துவத்தை நாம் பெற்றிருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். ஜி20 உச்சிமாநாடு வெறும் தூதரக ரீதியிலான நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், இந்தியாவின் திறனை உலக அரங்கில் முழுமையாக காட்சிப்படுத்தும் வாய்ப்பாக இருக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி, உலகம் அறிந்து கொள்ளவும், உலகம் முழுவதிலும் இந்தியா தனது ஆற்றலை பறைசாற்றவும் இது பெரிய வாய்ப்பாகும். அண்மையில் நான் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் விவாதித்தேன். அதனுடைய பிரதிபலிப்பு அவையிலும் நிச்சயமாக இருக்கும். இந்தியாவின் ஆற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கு அதே உணர்வு நாடாளுமன்றத்திலும் காணப்படுவது பயனுள்ளதாக இருக்கும்.