தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

India vs Pakistan : சாதனையை தக்கவைக்குமா இந்தியா? வரலாறு படைக்குமா பாகிஸ்தான்? - இந்தியா பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட்

world Cup cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:01 AM IST

அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக். 13) நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டின் ஹை லோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் நகரில் திரண்டு உள்ளதால் அந்த இடமே திருவிழா திடல் போல் காட்சி அளிக்கிறது.

போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் இலங்கையை வென்றதை அடுத்து அதீத நம்பிக்கையுடன் உள்ளது. அதேநேரம் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது கிடையாது.

அந்த சாதனையை தக்கவைக்கும் விதமாக இந்திய வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ள தொடக்க வீரர் சுப்மான் கில்லும் அகமதாபாத் விரைந்து உள்ளார்.

அவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இணையும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் பலமாக அமையும். கடந்த 2021ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லிவீஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

அதைத் தொடர்ந்து இன்றைய ஆட்டத்திலும் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெற்றிக்காக இவ்விரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்திய அணிக்கு முன்னதாகவே அகமதாபாத் விரைந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த இரண்டு ஆட்டங்களும் ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. ஐதராபாத் மைதானம் ராவல்பிண்டி மைதானத்திற்கு ஈடாக காணப்பட்டதால் அதில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பரீட்சயம் கிடையாது.

அதுவும் இந்திய அணிக்கு சாதகமான வாய்ப்பாக காணப்படுகிறது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் மல்லுக்கட்டுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. நரேந்திர மோடி மைதானம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்களை கையாளும் தன்மை கொண்டது. இந்த ஆட்டத்தில் அலை கடல் என திரண்டு வரும் ரசிகர்களை கட்டுப்படுத்த 11 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் 150 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மைதானத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாகன போக்குவரத்து ஏதுவாக போக்குவரத்து விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. போட்டிக்கு முன்னதாக பல்வேறு கலை நிகழ்வுகளை நடந்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. பிரபல பின்னணி பாடகர்கள் சங்கர் மஹாதேவன், அர்ஜித் சிங் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா இதுவரை தோற்றதே கிடையாது. அந்த சாதனையை இந்த ஆட்டத்திலும் இந்தியா தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்தியா அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் வீரர்கள் நல்ல பார்மில் உள்ளதால் இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு :

இந்தியா : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், சுப்மான் கில், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ்.

பாகிஸ்தான் :பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்.), அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஆகா சல்மான், ஃபகார் ஜமான், உசாமா மிர், முகமது வாசிம் ஜூனியர்.

இதையும் படிங்க :2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்! சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்?

ABOUT THE AUTHOR

...view details