டெல்லி:2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையில் அகில இந்திய காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்வாதி, ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்ன. இதற்கிடையே, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் நேருக்கு நேராக தங்களுக்குள் பலப்பரீட்சை செய்ய தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசை கவிழ்த்தி ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 400 தொகுதி வரையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேசம் , தெலங்கானா, ஒடிஷா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளும் அல்லது சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுவது பற்றி தங்களுக்கு கவலையில்லை என்றும் காரணம் அங்கெல்லாம் பாஜக வேட்பாளரை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மக்களவை எம்பியும், முன்னாள் மும்பை யூனிட் தலைவருமான மும்பையை சேர்ந்த ஃபயர் பிராண்ட் காங்கிரஸ் தலைவரான சஞ்சய் நிருபம், வரும் ஆக.31 மற்றும் செப்.1 ஆம் தேதிகளில் மும்பையில் 'இந்தியா' கூட்டணியின் முக்கியமான கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னால் பாட்னா மற்றும் பெங்களூருவில் நடந்த இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தங்களது கூட்டணி பலமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக பாட்னாவில் கடந்த ஜூன் 23-ல் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சிகள் கலந்துகொண்டன. இரண்டாவதாக பெங்களூருவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றதுடன் கூட்டணிக்கான பெயரையும் 'இந்தியா' (INDIA Alliance) என்று ஒருமனதாக உறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக மும்பையில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் அமைப்பான 'ஷேத்காரி சங்கதன்' தங்களது கூட்டணியில் கைகோர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அதிக ஆதிக்கம் கொண்ட இவ்வமைப்பை கூட்டணிக்கு வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.