டெல்லி :பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்தினர் மீது தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த தூதருக்கு சம்மன் வழங்கப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்கவா மாகாண தலைநகரில் சீக்கிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டார். 34 வயதான மன்மோகன் சிங் என்பவர் பணி முடிந்து ஆட்டோ ரிக்ஷா மூலம் வீடு திரும்பிக் கொண்டு இருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபரால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிருக்கு போராடிய மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்தை சேர்ந்த மக்கள் மீது அடிக்கடி இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் சீக்கிய மக்கள் தாக்குதல் நடத்தப்பட்ட நான்காவது சம்பவம் இது எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா தீவிரமாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் மூத்த தூதருக்கு சம்மன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீக்கிய சமூகத்தினர் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் குறித்து நேர்மையாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா கோரி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு பயந்து வாழும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், லாகூரில் 63 வயதான சர்தார் சிங்கை என்பவர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் சீக்கிய சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் கோவில்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சிறுபான்மையினர் பாதுகாப்பு விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் மத்தியில் இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. நாட்டில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும் என்றும் அதை பாகிஸ்தான் அரசு செய்ய தவறி விட்டதாகவும் மத்திய அரசு தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :அடுத்த டார்கெட் தெலங்கானா... கட்டம் கட்டி வீழ்த்த துடிக்கும் காங்கிரஸ்... வீழ்வாரா கே.சி.ஆர்!